Friday, March 19, 2010

வார்த்தைகளில் என்ன இருக்கு? ஏறுவரிசை - இறங்குவரிசை


அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!






கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!





போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!



அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!




முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.





அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!



நவயுக வேதாந்த விவாதம்
---------------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.



ஐங்கரன்
-------------

பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?



காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!



புல்லின் நுனியில் இருந்த பனித்துளியால்
புல் வளைந்து பூமியை தொடும்
தொலைவில் இருந்தது.

சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது.

-------------------------------------------

தற்கொலை செய்யும் நோக்கில்


மரக்கிளையில் கயிற்றில் தொங்கினேன்.
என் பழுதாங்காமல் கிளை முறிய
விழுந்தேன் “பொத்” என...

கிளையில் இருந்த இலை மெதுவாக
காற்றில் அசைந்தவண்ணம் கீழே விழுந்தது.

------------------------------------------------

தினமும் செடிகளுக்கு நீர் ஊற்றினேன்
வளர்ந்தது.

தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.

--------------------------------------------------

எங்கள் ஊரின் கிழக்கே பெரிய மலை உண்டு.
இருந்தும் சூரிய கிரணங்களை மறைக்க முடியவில்லை.
சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது

No comments:

Post a Comment