Wednesday, June 1, 2011

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை



எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"


என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

No comments:

Post a Comment